நாடக நடிகரை ஆபாசமாக பேசிய வாலிபர் கைது முன் பணத்தை திரும்ப கேட்டதால்
வந்தவாசி, செப்.9: வந்தவாசி அருகே முன் பணத்தை திரும்ப கேட்டதால் நாடக நடிகரை ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வந்தவாசி அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(47), நாடக நடிகர். இவரது குழுவில் 10க்கும் மேற்பட்ட நடிகர்கள் உள்ளனர். இவர்களுக்கு முன் வைப்புத்தொகையாக அவ்வப்போது பணம் கொடுப்பது வழக்கமாம். அதேபோல், மருதாடு கிராமத்தை சேர்ந்த லோகநாதன் மகன் மணிக்கண்டன்(25) என்பவர் நடிப்பதற்காக ரூ.30,000 முன் வைப்புத்தொகையாக கொடுத்தாராம். ஆனால், மணிகண்டன் நடிப்பதற்கு வராமல் தற்போது மாங்கால் சிப்காட்டில் வேலை செய்து வருகிறாராம். இந்நிலையில், நேற்று முன்தினம் கிருஷ்ணன் மருதாடு கிராமம் சென்று பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது, மணிகண்டன் அவரை ஆபாசமாக பேசியதுடன் பணம் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதுகுறித்து கிருஷ்ணன் கீழ்கொடுங்காலூர் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலு வன்கொடுமை தடுப்பு உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகிறார்.