கார் டிரைவரிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் * எஸ்பி அதிரடி உத்தரவு * வீடியோ வைரலாகி பரபரப்பு கலசப்பாக்கத்தில் விபத்து ஏற்படுத்திய
கலசப்பாக்கம், ஆக.8: கலசப்பாக்கத்தில் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை ஜாமீனில் விடுவிக்க ரூ.7 ஆயிரம் வாங்கிய எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் செய்து எஸ்பி சுதாகர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டம், காந்திபுரம் தில்லை நகரை சேர்ந்தவர் மாரியப்பன்(50). இவர் கார்களை வாடகைக்கு விட்டு வருகிறார். இவரது காரில் கடந்த மாதம் 18ம் தேதி திருச்சியில் இருந்து 3 நபர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர். காரை திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்த சாரதி(27) என்பவர் ஓட்டி வந்தார். தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக செய்யாற்றில் உள்ள மேம்பாலத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் டிரைவர் சாரதி மற்றும் காரில் வந்தவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கலசப்பாக்கம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். தொடர்ந்து, வழக்கில் இருந்து டிரைவர் சாரதியை ஜாமீனில் விடுவிக்க லஞ்சம் கேட்டாராம். இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், முதல் தவணையாக ரூ.5 ஆயிரம், இரண்டாவது தவணையாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாகவும், மீதத்தொகையை பின்னர் தருவதாகவும் டிரைவர் சாரதி குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ எஸ்பி சுதாகர் கவனத்திற்கு சென்ற நிலையில், கலசப்பாக்கம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தனை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.