முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் வேளாண் சங்கம் நிகழ்ச்சி முன்னேற்பாடுகளை வேளாண் துறை செயலாளர் ஆய்வு திருவண்ணாமலையில் இந்த மாத இறுதியில்
திருவண்ணாமலை, டிச. 7: திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் வேளாண் சங்கம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்துறை அரச செயலாளர் நேரடி ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த மாத இறுதியில் நடைபெறும் பல்வேறு அரசு நிழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார். அப்போது, நிறைவேற்றப்பட்ட அரசு திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட இருக்கிறார். மேலும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதோடு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் சங்கமம் எனும் பிரமாண்டமான நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அதற்காக, திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் மாநகராட்சி பள்ளி எதிரில் உள்ள திறந்தவெளி திடலில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், வேளாண் புதிய தொழில்நுட்பங்கள், நவீன வேளாண் கருவிகள், லாபம் தரும் பயிர் சாகுபடி முறைகள், உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி பயன்பாடு போன்றவை வேளாண் சங்கமம் நிகழ்ச்சியில் இடம் பெறும்.
அதன்மூலம், அரசு வழங்கும் திட்டங்களை அறிந்துகொள்ளவும், நவீன வேளாண் முறைகளை தெரிந்துகொள்ளவும் விவசாயிகளுக்கு வாய்ப்பு ஏற்படும். ஏற்கனவே, திருச்சியில் வேளாண் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதற்கு, விவசாயிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திருவண்ணாமலையில் நடைபெற உள்ள வேளாண் சங்கமம் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து, வேளாண் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேளாண்துறை அரசு செயலாளர் தட்சணாமூர்த்தி தலைமையில் நடந்தது.
அதில், கலெக்டர் தர்ப்பகராஜ், வேளாண்துறை இயக்குநர் முருகேஷ், டிஆர்ஓ ராம்பிரதீபன், வேளாண் இணை இயக்குநர் கண்ணகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது, வேளாண் சங்கமம் நிகழ்ச்சியில் அரங்குகள் அமைத்தல், மாநில அளவில் விவசாயிகளை பங்கேற்க செய்ய நடவடிக்கை எடுத்தல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, வேளாண் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ள மாநகராட்சி பள்ளி எதிரில் உள்ள திறந்தவெளி திடலை, அரசு செயலாளர் தட்சணாமூர்த்தி மற்றும் கலெக்டர் தர்ப்பகராஜ், வேளாண் இயக்குநர் முருகேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை நடத்தினர்.