விளையாடிய குழந்தைகளை தூக்கி செல்ல முயன்ற மூதாட்டி பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் சேத்துப்பட்டு அருகே வீட்டின் வெளியே
சேத்துப்பட்டு, டிச.7: சேத்துப்பட்டு அருகே வீட்டின் வெளியே விளையாடிய குழந்தைகளை தூக்கிச் செல்ல முயன்ற மூதாட்டியை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவில் நேற்று மூதாட்டி ஒருவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பசிக்கு உணவு கேட்டபடி சுற்றிக்கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 3 வயது குழந்தையை தூக்கிச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த சிறுவனின் தந்தை கூச்சலிட்டதும், மூதாட்டி சிறுவனை விட்டுவிட்டு சென்றுள்ளார்.
தொடர்ந்து அந்த மூதாட்டி பக்கத்து தெருவில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை தூக்கிச்செல்ல முயன்றுள்ளார். அந்த குழந்தையின் தாய் கூச்சலிட்டதும், அங்கிருந்தும் அந்த மூதாட்டி தப்பி சென்று, அங்குள்ள மாரியம்மன் கோயிலில் அமர்ந்துள்ளார். அவரை அப்பகுதி மக்கள் பிடித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையின்போது மூதாட்டி மனநிலை பாதித்தவர் போல் பேசியதோடு, முகவரியை மாற்றி மாற்றி கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் மூதாட்டியிடம் மீண்டும் குழந்தைகளை தூக்கிச்சென்றால் சிறையில் அடைத்து விடுவோம் என்று எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.