2ம் நாள் தெப்பல் உற்சவம் பராசக்தி அம்மன் பவனி திருவண்ணாமலை ஐயங்குளத்தில்
திருவண்ணாமலை, டிச.6: திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் நிறைவாக நடைபெறும் தெப்பல் உற்சவத்தின் 2ம் நாளான நேற்று ஐயங்குளத்தில் பராசக்தி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமரிசையாக நடந்து முடிந்து. அதைத்தொடர்ந்து, ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் 3 நாட்கள் நடப்பது வழக்கம். அதன்படி, , தெப்பல் உற்சவத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரர் தெப்பலில் பவனி வந்தார்.
அதைத்தொடர்ந்து, 2ம் நாளான நேற்று இரவு, மலர்கள் மற்றும் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்ட தெப்பத்தில் பராசக்தி அம்மன் ஐயங்குளத்தில் பவனி வந்து பத்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், தெப்பலில் பவனி வந்த அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக, இரவு 8 மணி அளவில், அண்ணாமலையார் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க பராசக்தி அம்மன் புறப்பாடு நடைபெற்றது. தெப்பல் உற்சவத்தை முன்னிட்டு, ஐயங்குளத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு கருதி, குளத்துக்குள் பக்தர்கள் இறங்க அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், மலைமீது ஏற்றப்பட்ட மகா தீபம், தொடர்ந்து 3வது நாளாக நேற்று காட்சியளித்தது. அதையொட்டி, மாலை 6 மணியளவில் மலைமீது மகா தீபம் ஏற்றப்பட்டது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அண்ணாமலை மீது மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளிக்கும். எனவே, மலைமீது தீபம் எரியும் நாட்களில் திருவண்ணாமலைக்கு வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, வரும் 13ம் தேதி வரை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.