மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் உத்திர காவேரி ஆற்றில்
ஒடுகத்தூர், ஆக.6: ஒடுகத்தூர் பகுதிகளில் உள்ள உத்திரிக்காவேரி ஆற்றில் இரவும், பகலும் மணல் கடத்தல் நடந்து வருவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன்படி, இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் உத்திரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சேர்பாடி, கெங்கசாணி குப்பம், கொட்டாவூர், கத்தாரிகுப்பம், மடையாப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக செல்லும் உத்திர காவேரி ஆற்றங்கரையோரம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சேர்பாடி பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து டிராக்டரில் சட்டவிரோதமாக ஒருவர் மணல் கடத்தி வந்து கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடிக்க முயன்ற போது அந்த நபர் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதனையடுத்து உடனடியாக கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை போலீசார் மணலுடன் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், பெரிய ஏரியூர் கிராமத்தை சேர்ந்த குமரன்(40) என்பவருக்கு சொந்தமான டிராக்டர் என தெரிய வந்தது. பின்னர், மணல் கடத்தல் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள குமரனை வலை வீசி தேடி வருகின்றனர்.