வீட்டு மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய போர்மென் சஸ்பெண்ட் மின்வாரிய அதிகாரிகள் தகவல் வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில்
வேலூர், ஆக. 6: வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில் வீட்டு மின்இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய போர்மென் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த செதுவாலை கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தனியார் மருத்துவமனை டிரைவரான இருசப்பன்(67), அதேபகுதியில் புதிதாக கட்டும் வீட்டிற்கு மின்இணைப்பு கேட்டு விரிஞ்சிபுரம் மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். மேலும் வீட்டின் அருகே மின்கம்பம் நடுவதற்காகவும் ரூ.27,000 ஆன்லைன் மூலம் செலுத்தி உள்ளார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் மின்வாரிய பிரிவு அலுவலக போர்மென் கிருபாகரனை அணுகியபோது அவர் இருசப்பனிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 24ம் தேதி தெள்ளூர் பகுதியில் மின் பராமரிப்புப்பணியில் இருந்த போர்மென் கிருபாகரனிடம், இருசப்பன் ரூ.3 ஆயிரம் வழங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் மின்வாரிய அலுவலகத்தில் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து கிருபாகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கிருபாகரன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க மின்வாரிய உயர்அதிகாரிகளுக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, லஞ்ச வழக்கில் கைதான போர்மென் கிருபாகரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.