ஒரே நாளில் 250 டன் குப்பைகள் அகற்றிய 2 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் கலெக்டர் கைகூப்பி நன்றி தெரிவித்ததால் நெகிழ்ச்சி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்
திருவண்ணாமலை, டிச.5: திருவண்ணாமலை கிரிவலப்பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் 2 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் களமிறங்கி ஒரே நாளில் 250 டன் குப்பைகள் அகற்றினர். அப்போது, தூய்மைப் பணியாளர்களுக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் கைகூப்பி நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவண்ணாமலையில் புகழ்மிக்க கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, நேற்று பவுர்ணமி கிரிவலம் அமைந்தது. கிரிவல பக்தர்களுக்கான குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரடி மேற்பார்வையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் தர்ப்பகராஜ் ஒருங்கிணைப்பில் 20 குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மகா தீபத்திருவிழா நிறைவடைந்த நிலையில், திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவல பாதையை ஒட்டுமொத்தமாக தூய்மை செய்யும் பணி நேற்று முழு வீச்சில் நடந்தது. அதையொட்டி, திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 1200 பேர் மற்றும் ஊராட்சிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 800 பேர் உள்பட மொத்தம் 2 ஆயிரம் தூய்ைமப்பணியாளர்கள் களமிறங்கி, தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். மேலும், 112 வாகனங்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்கையால், இந்த ஆண்டு பிளாஸ்டிக் குப்பைகள் வெகுவாக குறைந்திருந்தன. அன்னதானம் வழங்கிய இடங்களிலும் பெருமளவு குப்பை கழிவுகள் குறைந்திருந்தது.
இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நேற்று நடைபெற்ற ஒட்டுமொத்த தூய்மைப்பணியை, கலெக்டர் தர்ப்பகராஜ் நேரடி ஆய்வு செய்தார். அப்போது, தூய்மைப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு கை கூப்பி நன்றி தெரிவித்தார். அதனால், தூய்மைப் பணியாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். மேலும், இரவு, பகலாக பணியில் ஈடுபட்டு, நகரையும், கிரிவலப்பாதையையும் தூய்மைப்படுத்திய பணியாளர்களுக்கு தமது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, மகளிர் திட்ட அலுவலர் தனபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.