தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு தேடி ரேஷன் பொருட்கள் எம்எல்ஏ ஆய்வு கலசபாக்கம் ஒன்றியத்தில்
கலசபாக்கம், டிச.5: கலசபாக்கம் தொகுதியில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டத்தை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆய்வு செய்தார். தமிழக அரசு வழங்கும் பல்வேறு சேவைகள் மக்களின் வீடுகளுக்கு தேடி சென்றடையும் வகையில், அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கு சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் 70 வயதிற்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட சிறுவள்ளூர், கேட்ட வரம் பாளையம், மேல் சோழங்குப்பம், வீரலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ரேஷன் பொருட்கள் விநியோகத்தை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆய்வு செய்தார். அப்போது தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசிய பொருட்களை பெற்று பயனடைகிறார்களா? என்பது குறித்து ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கேட்டறிந்தார். அப்போது முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் எம்எல்ஏவிடம் கூறுகையில், ‘இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எங்களுக்கு வீடு தேடி வந்து ரேஷன் பொருட்கள் வழங்குவதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இதனால் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளின் சிரமம் குறைந்துள்ளது’ என கூறினர்.