மதுபாட்டிலுடன் மீன் வியாபாரி அரை நிர்வாணத்தில் ரகளை ஆரணியில் பரபரப்பு காவல்நிலையம், எம்எல்ஏ அலுவலகம் முன்பு
ஆரணி, நவ. 5: ஆரணியில் காவல்நிலையம், எம்எல்ஏ அலுவலகம் முன்பு மதுபாட்டிலுடன் மீன் வியாபாரி அரை நிர்வாணத்தில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் விஏகே நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின்(60) மீன் வியாபாரி. இவருக்கு மனைவி, 2 மகள் உள்ளனர். ஸ்டாலின் வழக்கம்போல் நேற்று மீன் வியாபாரத்தை முடித்துவிட்டு, மதுபோதையில் ஆரணி டவுன் பழைய பஸ்நிலையம் வழியாக கோட்டை மைதானம் அருகில் சென்றார். அப்போது எம்எல்ஏ அலுவலகம் முன்பு கையில் மதுபாட்டில்களை வைத்துக்கொண்டு ஆடையை கழற்றி அரை நிர்வாணமாக நின்றுகொண்டு அவ்வழியாக சென்றவர்களிடம் ரகளையில் ஈடுபட்டார்.
மேலும் சாலையின் நடுவில் நின்று கொண்டு அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளை மடங்கியும், நடந்து சென்ற பெண்களை வழிமறித்து ஆபாசமாக பேசி, பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். தொடர்ந்து எம்எல்ஏ அலுவலகம் முன்பு அமர்ந்து ஆடையை கழற்றி வீசி சாலையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு, வடிவேல் பாணியில் அலப்பறையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். தொடர்ந்து நகர காவல் நிலையத்திற்கு சென்று, ஸ்டேஷன் முன்பு அலப்பறை செய்து, ரகளையில் ஈடுபட்டார். உடனே, காவல்நிலையத்தில் இருந்து வந்த போலீசார் அவரை எச்சரித்து, போதையில் இருந்ததால் அவரை அங்கிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.