லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் * அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேக விழா * 5 மணிநேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் திருவண்ணாமலையில் திருவிழாக்கோலம்
திருவண்ணாமலை, நவ. 5: திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும், அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்திருக்கிறது அண்ணாமலையார் திருக்கோயில். தென்னகத்து கயிலாயம் என போற்றப்படும் திருவண்ணாமலையில் மலையே மகேசன் திருவடிவம் என்பதால், மாதந்தோறும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 9.45 மணிக்கு தொடங்கி இன்று இரவு 7.29 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, நேற்று மாலை தொடங்கி இரவு விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். பகலில் கூட்டம் குறைந்த நிலையில், இரவு 7 மணிக்கு பிறகு படிப்படியாக அதிகரித்தது.
அதனால், கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்க சன்னதிகள், இடுக்குப்பிள்ளையார் கோயில், திருநேர் அண்ணாமலை கோயில், அடி அண்ணாமலை திருக்கோயில் உள்ளிட்ட எண்ணற்ற சன்னதிகளை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதையொட்டி, கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் வழங்கப்பட்டது.
ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் விசேஷமானது என்பதால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநில பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்திருந்தது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் வெள்ளமாக திருவிழாபோன்று காட்சியளித்தது. இந்நிலையில், ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற அன்னாபிஷேக விழா நேற்று மாலை நடந்தது. சுவாமி சன்னதியிலும், கல்யாணசுந்தரேஸ்வரர் சன்னதியிலும் அன்னாபிேஷகம் நடந்தது.
பவுர்ணமி மற்றும் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக அண்ணாமலையர் கோயிலில் நேற்று காலையில் இருந்தே குவிந்தனர். ராஜகோபுரத்துக்கு வெளியே தென் ஒத்தைவாடை தெரு, வட ஒத்தைவாடை தெரு வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. அதனால், சுமார் 5 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. மேலும், ராஜ கோபுரம் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்ட பக்தர்கள், திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதோடு, பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. கட்டண தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பவுர்ணமியை முன்னிட்டு, நகருக்குள் கார், வேன் மற்றும் கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை. மேலும், 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டன. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல், பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.