ஆன்லைன் தரிசன டிக்கெட் முன்பதிவு நெட்ஒர்க் சிக்கலால் பக்தர்கள் ஏமாற்றம் திருவண்ணாமலை தீபத்திருவிழா
திருவண்ணாமலை, டிச.2: திருவண்ணாமலையில் நாளை நடைபெறும் பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனத்துக்கான ஆன்லைன் சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் பெற முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீப பெருவிழா நாளை(3ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்படும். இந்நிலையில், பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்கு கோயிலுக்குள் அனுமதிக்க 1600 பேருக்கு கட்டண தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, பரணி தீப தரிசனத்துக்கு ரூ.500 கட்டணத்தில் 500 டிக்கெட்களும், மகா தீப தரிசனத்துக்கு ரூ.500 கட்டணத்தில் ஆயிரம் டிக்கெட்களும், ரூ.600 கட்டணத்தில் 100 டிக்கெட்களும் முன்பதிவு செய்யும் வகையில், நேற்று காலை 10 மணிக்கு கோயில் இணையதளத்தில் கட்டணம் செலுத்தி பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
அதில், ஆதார் எண், செல்போன் எண், இமெயில் முகவரி ஆகியவற்றை பதிவேற்றம் செய்து, வங்கி ஏடிஎம் கார்டு மூலம் கட்டணம் செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், நெட் ஒர்க் சிக்கல் ஏற்பட்டதால், ஆன்லைன் டிக்கெட் பெற தொடர்ந்து பல முறை முயற்சித்தும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், காலை 11 மணியளவில் அனுமதிக்கப்பட்ட 1,600 தரிசன டிக்கெட்களும் விற்று தீர்ந்ததாக இணையத்தில் தகவல் வெளியானது. அதனால், ஆன்லைன் டிக்கெட் பெறலாம் என காத்திருந்த பலரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர்.