குடியிருப்புகள் மீது அடுத்தடுத்து கற்கள் வீச்சு போலீசார் விசாரிக்கும்போதும் விழுந்ததால் பரபரப்பு செய்யாறில் நேற்றிரவு
செய்யாறு, நவ.1: செய்யாறில் 8 வீடுகள் மீது அடுத்தடுத்து கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதி உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில் மாரியம்மன் கோயில் தெரு கடைசியில் 8 வீடுகளின் மீது நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் அடுத்தடுத்து கற்கள் விழுந்தன. இதனால் வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்த்தபோது மீண்டும் கற்கள் சாலைகளில் சரமாரியாக வந்து விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பதற்றமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு போலீஸ் எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தனர். அப்போது மீண்டும் கற்கள் வந்து விழுந்தன. அதில் உடைந்த செங்கற்களும், சிமெண்ட் கலவை பூசிய ரப்பீஸ் கற்களும் வந்து விழுந்தன. போலீசார் விசாரித்துக்கொண்டிருந்தபோதே தொடர்ந்து கற்கள் விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை. இதையடுத்து அருகில் உள்ள செங்கல் சூளை மற்றும் வயல்வெளி பகுதிகளில் யாரேனும் மர்மநபர்கள் வீசுகிறார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் பரபரப்பு நிலவியது.