சிறப்பு மருத்துவ குழு மூலம் சிகிச்சை அளிக்க நடவடிக்கை ஜவ்வாதுமலை பகுதியில் வேன் கவிழ்ந்து விபத்து
திருவண்ணாமலை, செப்.3: ஜவ்வாதுமலை பகுதியில் வேன் கவிழ்ந்த விபத்தில் சிக்கி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களை சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு ஆறுதல் கூறினார். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள குட்டக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட தானியாறு மலை கிராம அரசு நடுநிலைப் பள்ளிக்கு நேற்று முன்தினம் காலை மாணவர்கள் தனியார் வேனில் பயணம் செய்தனர். அப்போது, தானியாறு- வதியன்கொட்டாய் இடையே வேன் சென்றபோது, திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில், வேனில் பயணம் செய்த சுமார் 30 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக, அனைவரும் மீட்கப்பட்டு, போளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து 18 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் சந்தித்து நலன் விசாரித்தார்.
மேலும், மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, சிறப்பு மருத்துவர்கள் மூலம் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், மாணவர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எவ.வேலு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜவ்வாதுமலை தானியாறு கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி சிறப்பாக செயல்படுவதால், அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் இருந்து மாணவர்கள் சென்று அப்பள்ளியில் படிக்கின்றனர். எனவே, மாணவர்களின் வசதிக்காக அரசு சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தனியார் வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில், 40 குழந்தைகள் வழக்கம் போல பயணம் செய்துள்ளனர். அப்போது, 5 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்துள்ளது. காட்டு எருமை குறுக்கிட்டதால் கட்டுப்பாட்டை இழந்ததாக வேன் டிரைவர் தெரிவித்துள்ளார். அந்த விபத்தில், 18 குழந்தைகளுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முழுமையாக சிகிச்சை அளிக்கப்பட்டு 14 பேர் நாளை (இன்று) டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். மற்ற 4 குழந்தைகளை மேலும் ஒரு நாள் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்து டிஸ்சார்ஜ் செய்ய டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். அதில், இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் எலும்பில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவர்கள் மூலம் குழுவாக குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். குழந்தைகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பி சி.என்.அண்ணாதுரை, மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.தரன், ப.கார்த்திவேல்மாறன், துணை மேயர் ராஜாங்கம், துரைவெங்கட் உள்ளிட்டோர் உடனடிருந்தனர்.