ஆரணி உட்கோட்ட பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சாலை, பாலங்கள் சீரமைப்பு பணிகள் தொடங்கியது
ஆரணி, செப். 2: நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு ஆரணி உட்கோட்டத்தில் 351.00 கி.மீ. நிளம் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை நெடுஞ்சாலைத துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி ஆரணி உட்கோட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பராமரிப்பு நடவடிக்கையாக பாலங்கள் மற்றும் சாலைகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில் ஆரணி உட்கோட்டத்தில் உள்ள ஆற்காடு-விழுப்புரம், திருவத்திபுரம்-ஆரணி, போளூர்-ஆரணி, கண்ணமங்கலம்-ஆரணி, தேவிகா புரம்-ஆரணி ஆகிய பகுதிகளில் உள்ள மாநில மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள், இதர சாலைகளில் 800க்கும் மேற்பட்ட சிறு பாலங்கள், பெரிய பாலங்களை பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பாலங்களிலும் மழையின்போது, தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் பாலங்களில் உள்பகுதியில் வளர்ந்துள்ள செடி கொடிகள் முள்புதர்கள், மண்மேடுகள் அகற்றும் பணிகள் கோட்ட பொறியாளர் சந்திரன் அறிவுறுத்தலின் பேரில், உதவி கோட்ட பொறியாளர் நாராயணன் தலைமையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், பாலத்தில் உள்ள சிறிய அளவிலான பழுதுகள் நீக்கப்பட்டு பாலங்கள் முழுமையாக பெயிண்ட் அடிக்கப்பட்டடு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதேபோல், நெடுஞ்சாலைகளில் சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள செடிகள், முள்புதர்கள், மண்மேடுகள், போக்குவரத்துக்கு இடையூராகவும், ஆபத்தாகவும் உள்ள மரங்கள், மரக்கிளைகள் அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை, ஆரணி உதவி கோட்ட பொறியாளர் நாராயணன் ஆய்வு செய்து பணிகளை மழை தொடங்குவதற்கு முன்பு பணிகளை விரைந்து முடிக்க பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, இளநிலை பொறியாளர் வரதராஜன் மற்றும் சாலை ஆய்வாளர்கள் சாலை பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.