திருத்தணி முருகன் கோயிலில் கூடுதல் விலைக்கு மலர்மாலை விற்பனை: விலை பட்டியல் வைக்க கோரிக்கை
திருத்தணி, ஆக.11: திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகை தரும் ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமானுக்கு மலர்மாலை அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம். பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில், மலர்மாலை கடை மற்றும் தேங்காய், பூஜை பொருட்கள் கடைகள் குத்தகை உரிமம் வழங்கி வியாபாரம் நடைபெற்று வருகிறது.கடந்த மாதம் மலைக்கோயிலில் மலர் மாலைகள் விற்பனை செய்யும் கடைக்கு 2025-26ம் ஆண்டுக்கான குத்தகை உரிமம் ஆன்லைன் மூலம் ரூ.26 லட்சத்திற்கு எடுக்கப்பட்டது.
இந்நிலையில், குத்தகை உரிமம் பெற அதிக தொகை செலுத்தி மலர்மாலை கடை எடுக்கப்பட்டுள்ளதால், சாதாரண பக்தர்கள் பாதிக்கும் வகையில் மலர்மாலை விலையை உயர்த்தி ரூ.200 முதல் ரூ.500 வரை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாமிக்கு மாலை அணிவிக்க விரும்பும் பக்தர்கள் விலை அதிகமாக இருப்பதால், பணம் செலுத்தி மாலை வாங்க முடியாத நிலையில் வேதனையுடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குமுறுகின்றனர். இதனால், கடைக்கு முன்பு மலர்மாலை விலை தொடர்பாக விலை பட்டியல் வைக்கவும், மலர்மாலைக்கு அனுமதி பெற்று பஞ்சாமிர்தம், சந்தனம், முருகன் மாலை அணியும் மணிமாலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனையை தடை செய்யவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.