பேருந்து அடியில் தூங்கியபோது டயரில் சிக்கி பெண் படுகாயம்
போரூர், ஆக.5: அமைந்தகரை பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (41), தனியார் பேருந்து டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு, ஷெனாய் நகரில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையோரம் பேருந்தை நிறுத்திவிட்டு, மறுநாள் காலை அந்த பேருந்தை எடுக்க வந்துள்ளார்.
பேருந்தை பின்னோக்கி இயக்கியபோது திடீரென பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதால், கீழே இறங்கி வந்து பார்த்துள்ளார். அப்போது பேருந்து டயருக்கு அடியில் சிக்கி பெண் ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடியது தெரிந்தது.
இதை பார்த்த பொதுமக்கள், அந்த பெண்ணை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அதில், பேருந்தில் சிக்கி படுகாயமடைந்த பெண் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த சரஸ்வதி (32) எனவும், அமைந்தகரையில் உள்ள மகளை பார்த்துவிட்டு திரும்பும் வழியில் இரவாகிவிட்டதால் அந்த பேருந்து அடியில் தூங்கியதும் தெரியவந்தது.