திருத்தணி பகுதியில் கள்ள சந்தையில் மது விற்பனை குறைந்தது
திருத்தணி, செப்.3: திருத்தணி சுற்றுவட்டார பகுதியில் போன் செய்தால் போதும் வீடுதேடி வரும் மதுபானம் தொடர்பாக தினகரன் நாளிதழில் கடந்த 25ம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கி செல்பவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மதுபாட்டில்களை வாங்கிச்சென்று பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் அடையாளம் காணப்பட்டு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி செருக்கனூர் காலனியைச் சேர்ந்த முருகம்மாள், யேசம்மாள், சீனிவாசன் ஆகியோர் 10 பாட்டில்கள் வீதம் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தபோது திருத்தணி போலீசார் அவர்களை கைது செய்தனர். திருத்தணி என்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த வினோத் என்பவர் நேற்று முன்தினம் 10 மதுபாட்டில்கள் எடுத்துச் சென்றபோது போலீசார் கைது செய்தனர். 4 பாட்டில்களுக்கு மேல் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கிச்செல்லும் நபர்களை குறிவைத்து போலீசார் கைது செய்து வருவதால், கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் உஷாராகி பதுங்குகின்றனர். இருப்பினும் போலீசார் தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் மது விற்பனையில் புது டெக்னிக் பயன்படுத்தியவர்கள் செல்போன்களை சைலண்ட் மோடுக்கு வைத்துள்ளனர்.