திருத்தணி மலைப்பாதையில் இன்றும் வாகனங்களுக்கு தடை
திருத்தணி, செப்.3: திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு செல்லும் சாலை புதுப்பிக்கும் பணி முடியாததால், இன்றும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலுக்கு மலைப்பாதை வழியாக பக்தர்கள் வாகனங்களில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலை கோயிலுக்குச் செல்லும் தார்சாலை ஆங்காங்கே சேதமடைந்துள்ளதால், பக்தர்கள் தடையின்றி கோயிலுக்குச் சென்றுவர சாலையை சீரமைக்க கோயில் நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, கோயில் நிதியிலிருந்து ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு 1,370 மீட்டர் நீளம் கொண்ட தார்சாலை புதுப்பிக்கும் பணி நேற்று முன்தினம் முதல் 2 நாட்களுக்கு பஸ் வேன் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டு, பக்தர்கள் மலைப்பாதையில் கோயில் பஸ்களில் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சாலை புதுப்பிக்கும் பணிகள் முடிவடையாததால், இன்றும் பஸ், வேன், கார்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.