தபால்நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி செய்தவர் கைது
திருவள்ளூர், செப். 2: அரக்கோணம், மேல்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி (40). இவரது உறவினரான பெத்துராஜ் என்பவர் மூலம் கடந்த 2022ம் ஆண்டு மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜீவானந்தம் (49) என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து விஜியிடம் தபால் நிலைத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஜீவானந்தமும், அவரது மனைவி கலாசெல்வியும் சேர்ந்து கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதலில் ரூ.9.90 லட்சம் பெற்றுள்ளனர். பிறகு தொடர்ந்து 5 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3.10 லட்சம் பெற்றுள்ளர்.
ஆனால் அவர்கள் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். பலமுறை கேட்டும் வேலை வாங்கித் தராததால் விஜி கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் போலி காசோலையை கொடுத்துள்ளனர். அந்த காசோலையை விஜி வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பியது. இதனால் விஜி கடந்த பிப்ரவரி 19ம் தேதி திருவள்ளூர் மாவட்ட எஸ்பியிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் பணத்தை திருப்பி தராமல் ஜீவானந்தம் ஏமாற்றி வந்தது உறுதியானது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ஜீவானந்தத்தை நேற்று முன்தினம் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.