எஸ்ஐஆர் பணி தொடர்பாக திமுக ஆலோசனைக்கூட்டம்
திருப்பூர், நவ.18: தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகமான முரசொலி மாறன் வளாகத்தில் தெற்கு மாநகரத்திற்குட்பட்ட தெற்கு சட்டமன்ற தொகுதி பெரிய கடை வீதி 44, 45 மற்றும் 50 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ராம்குட்டி, தெற்கு மாநகர கழக செயலாளர் டிகேடி மு.நாகராசன், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தங்கள் பகுதியில் தகுதியான வாக்காளர்கள் யாரும் விட்டு விடாத வகையில் பாக முகவர்கள் ஒவ்வொரு வாக்காளருக்கும் முறையாக விண்ணப்பங்கள் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அலுவலர்களிடம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும், விண்ணப்பம் பூர்த்தி செய்வதில் உள்ள குழப்பங்கள், சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் கட்சி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், பி.எல்.ஏ 2 முகவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.