மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஆணைய இயக்குனர் ஆய்வு: சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு வழங்கினார்
திருப்பூர், நவ.26: திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஆணைய இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி ஆய்வு செய்தார். இதில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் திவாரி நேற்று திருப்பூர் மாவட்டத்திற்கு வந்தார். அவா் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அவிநாசி தனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டு வைக்கப்பட்டுள்ள அறை, வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி, முனியப்பன் கோவில் வீதி, சேவூர் சாலை பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்படும் பணிகளை ஆய்வு செய்தார்.
இதுபோல் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15 வேலம்பாளையம் அமர்ஜோதி கார்டன் பதிநகர் பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்படும் பணி, திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை பார்வையிட்டார். வார்டு எண் 15 கரை தோட்டம் பகுதி, வார்டு எண் 45, காங்கேயம் சாலை சிடிசி அருகில் உள்ள பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்படும் பணி, இதுபோல் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சி பகுதி, காங்கயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிவன்மலை அடிவாரம், சிவன்மலை தெற்கு வீதி, தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குள்ளாய்பாளையத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்படும் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டு வைக்கப்பட்டுள்ள அறை, வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளையும் பார்வையிட்டார்.
உடுமலை சட்டமன்ற தொகுதி மற்றும் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்படும் பணி, வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில் மாவட்ட கலெக்டர் மனிஷ், மாநகராட்சி ஆணையாளர் அமித், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சாந்தி, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, உதவி ஆணையர் (கலால்) செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) புஷ்பாதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கல்பனா, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், தாசில்தார்கள் (அவிநாசி) சந்திரசேகர், (பல்லடம்) ராஜேஸ், (காங்கேயம்) தங்கவேல், திருப்பூர் (வடக்கு) கண்ணாமணி, (தாராபுரம்) ராமலிங்கம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக தாராபுரம் தொகுதியில் வாக்காளர் திருத்த படிவங்களை 100 சதவீதம் வாக்காளர்களிடம் கொடுத்து, அதனை நிரப்பி பின்னர் பதிவேற்றம் செய்து சிறப்பாக பணியாற்றிய தனம், யுவராணி, சுதா, மாரியம்மாள் ஆகிய 4 பேருக்கு தேர்தல் ஆணைய இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி பரிசுகள் வழங்கினார்.