பாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு உடுமலை நாராயணகவி இலக்கிய விருது
உடுமலை, டிச.12: திருப்பூர் மாவட்ட இசைப்பள்ளி சார்பில் தமிழிசை விழா நடைபெற்றது. மாவட்ட இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணமாணிக்கம் வரவேற்றார். உதவி இயக்குநர் செந்தில்குமார் தலைமை ஏற்று பேசினார். நிகழ்வின் முன்னிலையாக மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினர்.
சிறப்புரையாக பாடகர் டி.எம்.கிருஷ்ணா பேசியதாவது:
இசை அனைவருக்கும் பொதுவானது. இதற்கு மொழி கிடையாது. கர்நாடக இசை என்றும் தமிழிசை என்றும் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இசை அனைவருக்கும் பொதுவானது. இசையை அனைவரும் ரசிக்க வேண்டும். இசையை ரசிக்கும்போது மனிதனுக்கு நோய் நீங்கும். இசையை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்க முடியாது. உலகம் முழுக்க பரந்து விரிந்து அனைத்துத்தலங்களிலும் பயணம் செய்யக்கூடியது.
இந்தியாவில் பிற மாநிலங்களில் இது போன்று 17 மாவட்டங்களில் இசைப்பள்ளி இல்லை. இதற்காக தமிழக அரசிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவி பெயரில் விருது வழங்கியும் உடுமலை வரலாறு புத்தகம் கொடுத்து சிறப்பிக்கப்பட்டது. இதில் மாவட்ட இசைப்பள்ளி மாணவர்கள் மற்றும் உடுமலையின் ஆளுமைகள் பலர் கலந்து கொண்டனர்.