கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டம் கைவிட எம்பியிடம் மனு
திருப்பூர், செப். 3: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பூர் வருகை தந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், செம்மிபாளையம் தொடங்கி கோவை மாவட்ட பெரியநாயக்கன்பாளையம் வரை புதிதாக கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கு டிஜிட்டல் நில அளவை செய்யப்பட்டு தார் சாலையில் அதற்கான குறியீடுகள் இடப்பட்டுள்ளது. இதனால் செம்மிபாளையம், சுக்கம்பாளையம், நடுவேலம்பாளையம், பள்ளிபாளையம், கிடாத்துறைபுதூர், காளிபாளையம், சாமளாபுரம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நில உரிமையாளர்கள் முழுமையான விவரம் பெற முடியாமல் பதட்டத்தில் உள்ளனர். கோவை நகரை சுற்றியுள்ள பகுதிகளில் குறுக்கும் நெடுக்குமாக ஏராளமான சாலை வசதிகள் உள்ளது. அதில் தேவையான சாலைகளை அகலப்படுத்தி போக்குவரத்தை விரிவுபடுத்தலாம் அதை கணக்கில் கொள்ளாமல் சுமார் 1400 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்து இந்த சாலை திட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தால் ஏராளமான சிறுகுறு, நடுத்தர விவசாயிகளின் நிலங்கள் பறிபோய் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை ஒன்றிய, மாநில அரசாங்கங்கள் உடனடியாக கைவிட வேண்டும். இந்த திட்டம் குறித்து முழுமையான விவரங்கள் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை ஆணையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலமாக பொதுமக்கள் அறியும் வகையில் உரிய விவரங்களை பொதுவெளியில் வெளியீடு செய்ய ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.