அனுப்பட்டி ஜெ.ஜெ.நகரில் குப்பை கொட்டிய லாரி, பொக்லைன் சிறை பிடிப்பு
பல்லடம், செப். 3: பல்லடம் அருகே அனுப்பட்டி ஜெ.ஜெ.நகர் அருகில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கோவை நீலம்பூர் பகுதியை சேர்ந்த குப்பைகளை எடுத்துவந்து கொட்டிய லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
பல்லடம் அருகே அனுப்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ. நகர் அருகில் முத்துசாமி, விஸ்வநாதன் ஆகியோருக்கு சொந்தமான உடையாகவுண்டர் தோட்டத்து நிலத்தில் பள்ளமாக இருந்த இடத்தில் கட்டிட இடிபாடு மண்களை கொண்டுவந்து கொட்ட நிலத்தின் உரிமையாளர்கள் அனுமதி வழங்கி இருந்தனர்.
இந்நிலையில் கோவை நீலம்பூர் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை லாரியில் எடுத்து வந்து கடந்த பல மாதங்களாக கொட்டப்பட்டு இருந்துள்ளது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் எந்த பிரச்னையும் இல்லாமல் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. குப்பையின் துர்நாற்றம் அப்பகுதியில் வீச மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து நிலத்தின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அத்துடன் குப்பைகளுடன் வந்த லாரி மற்றும் குப்பையை சமன்படுத்த பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து வந்த பல்லடம் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கொட்டப்பட்ட குப்பைகளை திரும்ப எடுத்துச்செல்லுமாறு அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.