மகாத்மா காந்தி தேசிய ஊரக பணியாளர்களுக்கு குறைவான ஊதியம்
திருப்பூர், செப். 2: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுவினை வழங்கினர். இதில் பல்லடம் தாலுக்கா பொன்நகர் பகுதியைச் சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக பணியாளர்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், பொன்நகரில் 5 மாற்றுத்திறனாளிகள் உட்பட சுமார் 40 நபர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றோம்.
இதில் பணியாற்றும் தங்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் வருவாய் மட்டுமே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் 90 நாட்களை கடந்தும் சம்பளம் வழங்கப்படவில்லை. நாள் ஒன்றுக்கு 90 ரூபாய்க்கும் குறைவான கூலி வழங்கப்படுவதால் தங்கள் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய முடியாமல் தவிப்பதால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005ன் படி கூலி நிர்ணயம் செய்து முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதைப்போல், திருப்பூர் மாவட்டம், அவிநாசி துலுக்கமுத்தூர் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பல்லடம் ஒன்றிய குழுவினர், பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், திருப்பூர் மாநகர இருசக்கர வாகன ஆலோசகர்கள் நலச்சங்கத்தினர், பல்லடம் சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றிய குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.