தெற்கு தொகுதியில் கூடுதலாக 44 வாக்குச்சாவடிகள் அமைப்பு
திருப்பூர், ஆக. 30: திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 1200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கிற வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு கமிஷனர் அமித் தலைமை தாங்கி பேசினார்.
துணை கமிஷனர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தெற்கு தொகுதியில் 245 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ளவை பிரிக்கப்பட்டது. இதனால், கூடுதலாக 44 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவர்களது கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்கப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர்.