ஆபத்தான நிலையில் இயங்கி வரும் பொங்கலூர் தபால் நிலைய அலுவலகம்
பல்லடம், நவ.25: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் பி.ஏ.பி. அலுவலக வளாகத்தில் உள்ள தபால் அலுவலக கட்டடங்கள் சேதமாகி ஆபத்தான நிலையில் உள்ளது. அதனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பொங்கலூரில் ஆரம்பத்தில் கடை வீதியின் அருகில் செயல்பட்டது. தற்போது இந்த அலுவலகம் பி.ஏ.பி. அலுவலக வளாகத்தில் பழமையான கட்டடத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.இங்கு தொடங்கிய காலத்தில் அந்த கட்டடம் நல்ல நிலையில் இருந்தது. சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் இருந்தன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் இணைந்து சேமிக்க தபால் அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது கட்டடங்களில் போதிய பராமரிப்பு இன்றி பி.ஏ.பி. குடியிருப்பு பகுதியில் பொதுமக்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது.
மிகவும் மோசமான, கனமழை பெய்தால் எப்போது வேண்டுமானாலும் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இக்கட்டடத்தில் தான் தற்போது பொங்கலூர் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது.மக்களின் குடியிருப்புகளுக்கு சற்று தொலைவில் அமைந்துள்ளதால் வயதானவர்கள் அங்கு சென்று வருவது மிகுந்த சிரமமாக உள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் உள்பட பலரும் அங்கே சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த தபால் நிலையத்தை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இடமாற்றம் செய்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று பொங்கலூர் பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.