அரசு பள்ளி மைதானத்தில் குளம் போல தேங்கிய மழை நீர்
திருப்பூர், அக்.24:வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியது முதல் திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை முதல் அதிகன மழை வரை பெய்தது. நேற்று முன் தினம் அதிகாலை முதல் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நொய்யல் வீதி தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி வளாக மைதானத்தில் மழை நீர் தேங்கியுள்ளளது.
சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கல்வி பயிலக்கூடிய பள்ளியில் மழை நீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு நிலவுவது மட்டுமல்லாது மாணவ,மாணவிகள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளவும், உடற்பயிற்சி பாடப்பிரிவை பயன்படுத்த முடியாத வகையிலும் உள்ளது. பள்ளி மைதானம் சாலையில் இருந்து தாழ்வான நிலையில் இருப்பதாகவும், இதனால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது. எனவே தண்ணீர் தேங்காத வகையில் பள்ளி மைதானத்தில் மணல் நிரப்பி சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.