பெரியகோட்டை ஊராட்சியில் குடிநீர் இணைப்புக்கு தாமதம்: பொதுமக்கள் அவதி
உடுமலை, நவ. 19: உடுமலை அருகே உள்ள பெரியகோட்டை ஊராட்சியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், புதிதாக உருவான குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, ஏராளமானோர் குடிநீர் இணைப்புக்கான டெபாசிட் தொகையை செலுத்தி உள்ளனர். பிவிசி குழாய்களையும் குடியிருப்புவாசிகளே வாங்கி தரவேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தால் கூறப்பட்டதாலும், பலரும் பிவிசி பைப்புகளை வாங்கி கொடுத்துள்ளனர்.
ஆனாலும் பல மாதங்களாக குடிநீர் இணைப்பு வழங்காமல் ஊராட்சி நிர்வாகத்தினர் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் குடியிருப்புவாசிகள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பப்போவதாக தெரிவித்தனர்.