பாதுகாப்பற்ற நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்
உடுமலை, நவ. 19: அணிக்கடவு ஊராட்சி ராமச்சந்திராபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நகைகளை இங்கு அடகு வைத்து கடன் பெறுகின்றனர். மேலும், பல்வேறு சொத்து ஆவணங்களை பெற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. நகை, பணம் மற்றும் ஆவணங்கள் உள்ள இந்த கூட்டுறவு வங்கி வளாகம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த வங்கியின் பிரதான நுழைவு வாயிலில் உள்ள இரும்பு கேட் மூடப்படாமல் எப்போதும் திறந்தே கிடக்கிறது. இரு கேட்டுக்கும் இடையே ஒரு கம்பியை வைத்து தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். இதனால் யாரும் எளிதில் உள்ளே நுழையும் வகையில் உள்ளது. சமீபத்தில் இந்த வங்கியில் கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டது. அதேநேரம், விவசாயிகளின் நகை, சொத்து ஆவணங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். காவலாளி நியமித்து கேட்டை முறையாக பூட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.