மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது
அவிநாசி,செப்.17: அன்னூர் தென்னம்பாளையம் ரோடு பாலகிருஷ்ணன் மனைவி ராஜலட்சுமி (61). இவர் கடந்த வாரம் அன்னூரில் இருந்து தூத்துக்குடிக்கு செல்வதற்காக பேருந்தில் சென்றார். கருவலூர் வழியாக பேருந்து வந்து கொண்டிருந்த போது, அவரது கைப்பையில் வைத்திருந்த 9 1/4 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவிநாசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில், அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து, கைப்பையில் வைத்திருந்த தங்க நகைகளை திருடிய நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று புளியம்பட்டி ஜே.ஜே.நகரை சேர்ந்த விஜய் மனைவி காமாட்சி (44), என்பவரிடமிருந்து அவிநாசி போலீசார் தங்க நகைகளை பறிமுதல் செய்து நேற்று காமாட்சியை கைது செய்து திருப்பூர் சிறையிலடைத்தனர்.