திருமூர்த்தி அணை நீர்மட்டம் சரிவு
உடுமலை, அக். 16: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. பிஏபி தொகுப்பு அணைகளில் இது கடைசி அணையாகும். இந்த அணையின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. தற்போது 4-ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.திருமூர்த்தி அணையில் நேற்று காலை நீர்மட்டம் 37.51 அடியாக இருந்தது.
அணைக்கு காண்டூர் கால்வாய் மூலம் 881 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. பாசனத்துக்க 997 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.இதேபோல, உடுமலையில் உள்ள மற்றொரு அணையான அமராவதி அணையின் உயரம் 90 அடி. இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையாத நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. நேற்று அணையின் நீர்மட்ட்ம் 70.74 அடியாக இருந்தது. 242 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 865 கனஅடி நீர் பாசனத்துக்கு வெளியேற்றப்படுகிறது.