கல்லூரி சாலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழா 1008 சஹஸ்ர கலசாபிஷேகம்
திருப்பூர், ஆக. 15: திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில் திருப்பூர் மாநகரில் பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்து வருகிறது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை மாதம் 2ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வந்த நிலையில் மண்டல பூஜை நிறைவுவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயிலில் காலை மகா கணபதி ஹோமம், 108 வலம்புரி சங்காபிஷேகம், 1008 சஹஸ்ர கலசாபிஷேகம் நடைபெற்றது.
இதனைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்வில் சபரிமலை பிரதம தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரு மோகனுரு தந்திரி கலந்துகொண்டு பூஜைகளை செய்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜனசங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.