அவிநாசி அருகே நள்ளிரவில் பேக்கரியில் திருடியவர் கைது
அவிநாசி, அக். 8: அவிநாசி அருகே நள்ளிரவில் பூட்டை உடைத்து பேக்கரியில் திருடியவரை அவிநாசி போலீசார் நேற்று கைது செய்தனர். அவிநாசி அருகே பெரியாயிபாளையம் புது காலனியில் மயில்சாமி என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். ஆயுத பூஜையை முன்னிட்டு கடந்த 1ம் தேதி, கடையை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றிருந்தார். நேற்று காலை 11 மணி அளவில் மீண்டும் பேக்கரிக்கு வந்து பார்த்தபோது, யாரோ பேக்கரியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லா பெட்டியில் இருந்த பணம் ரூ.350ஐ திருடிச்சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து மயில்சாமி, அவிநாசி போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று அருகில் இருந்த சிசிடிவி காமிரா காட்சிகளை பார்த்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், அவிநாசி தெக்கலூர் காந்திநகரை சேர்ந்த முத்துவேல் (69) என்பவர் திருடியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.