அவிநாசி அருகே 2 ஆயிரம் ஆடு வெட்டி நேர்த்திக்கடன்
அவிநாசி, ஆக.7: அவிநாசி அருகே போத்தம்பாளையம் பெரிய கருப்பராயன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த மாதம் 22ந்தேதி இரவு சாமி சாட்டுடன் தொடங்கியது. இதையடுத்து முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு படைக்கலம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு வாண வேடிக்கையும் குதிரை வாகன பூஜையும், அதிகாலை 3 மணிக்கு பேச்சியம்மனுக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
பின்னர் அதிகாலை 5 மணிக்கு திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் 2 ஆயிரம் ஆட்டுக்கிடாய்களை வெட்டி நேர்த்திகடன் செலுத்தினர். திருவிழாவில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.