லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி
திருப்பூர்,அக்.4: திருப்பூர் பல்லடம் சாலை வித்தியாலயா பகுதியை சேர்ந்தவர் குமார் (39). பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தரணிஷ் (7), அதே பகுதியில் உள்ள வித்யாலயா அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வந்தார். காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் நேற்று மதியம் வித்யாலயா பகுதியில் உள்ள மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாக தெரிகிறது.
அப்பொழுது அப்பகுதியில் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை கொண்டு செல்லும் லாரி வந்துள்ளது. இதனை பார்த்த சிறுவர்கள் பின்புறமாக அனைவரும் ஏரி விளையாடியதாக தெரிகிறது. லாரி அப்பகுதியில் இருந்து நகர்ந்து சென்றதால் மற்ற சிறுவர்கள் எல்லாம் இறங்கியுள்ளனர். ஆனால் தரணிஷ் மட்டும் அதிலிருந்து இறங்காமல் தொங்கிக்கொண்டு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள வளைவில் லாரி திரும்பும் போது தரணிஷ் தவறி கீழே விழுந்தத்தில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தான்.
தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் லாரி டிரைவரிடம் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 7 வயது சிறுவன் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.