சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
திருப்பூர், அக்.25: திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். இவர் கடந்த 2019ம் ஆண்டு கோவை மாவட்டம் செலக்கரிச்சல் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (29), என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. வேல்முருகன், கொடுவாய் பகுதியில் வேலை செய்து வந்தார்.இதையடுத்து, இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியுள்ளனர். வேல்முருகன், அந்த சிறுமியை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி சிறுமியை தனியாக அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பலமுறை இருவரும் தனிமையில் சந்தித்தனர். இதில் சிறுமி கர்ப்பமானார். இதைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி, வேல்முருகனிடம் கூறினார்.
ஆனால், வேல்முருகன் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாக கூறி மறுப்பு தெரிவித்தார். தன்னால் பெற்றோருக்கு தலைகுனிவு ஏற்படுமே என்று மனம் உடைந்த சிறுமி, கடந்த 19-12-2019 அன்று வீட்டில் இருந்தபோது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து காங்கயம் மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. வேல்முருகனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கோகிலா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.