புளியங்குடி நகராட்சி ஆணையர் நாகராஜ் தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு தூய்மை பணியாளர்கள் நன்றி தெரிவிப்பு
புளியங்குடி, அக்.31: புளியங்குடிக்கு வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நகராட்சி ஆணையர் நாகராஜ் தலைமையில் தூய்மை பணியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசியில் பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் நேற்றிரவு மாலை 7 மணியளவில் புளியங்குடி வழியாக மதுரை சென்றார். புளியங்குடியில் இ.யூ முஸ்லிம் லீக், தமுமுக கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிந்தாமணி டோல்கேட் பகுதியில் நகராட்சி ஆணையர் நாகராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் திரண்டு வந்து முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். முதல்வர் வாகனம் வந்தவுடன் புவி சார் குறியீடு பெற்ற புளியங்குடி எலுமிச்சை பழத்தை நகராட்சி ஆணையர் நாகராஜ் பொக்கை வடிவில் முதல்வரிடம் வழங்கினார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கியதற்கு பணியாளர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து கொண்டனர்.
