மோசடி வழக்கில் மூதாட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை நாங்குநேரி கோர்ட் தீர்ப்பு
நெல்லை, அக்.31: களக்காடு அருகே மோசடியில் ஈடுபட்ட மூதாட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நாங்குநேரி கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2015ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த செல்லம்மாள்(69) என்பவர் கூறியுள்ளார். காளிமுத்துவை நம்ப வைத்து பணம் வாங்கி ஏமாற்றியது தொடர்பாக களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்லம்மாளை கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு விசாரணையானது நாங்குநேரி கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பூமிநாதன், நேற்று வழக்கில் சம்பந்தப்பட்ட செல்லம்மாளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் முறையாக ஆஜர்படுத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுத்த நாங்குநேரி டிஎஸ்பி தார்ஷிகா நடராஜன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் களக்காடு போலீசார், அரசு வக்கீல் வனிதா ஆகியோரை நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
