நெல்லையில் அனுமதியின்றி செயல்பட்ட 2 குடிநீர் குடோனுக்கு சீல்
நெல்லை, செப். 30: நெல்லை குறுக்குத்துறை பகுதியில் இயங்கி வந்த தனியார் குடிநீர் விநியோக குடோன் ஒன்றில், உரிய அரசு அனுமதியின்றி, முறையான சுத்திகரிப்பு செய்யாமல் பொதுமக்களுக்கு குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய புகார்கள் வந்தன. இதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் புஷ்பராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், நேற்று காலை சம்பந்தப்பட்ட குடிநீர் குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, குடோன் எவ்வித அரசு அனுமதியும் பெறாமல் இயங்கி வந்ததும், குடிநீர் சுகாதாரமற்ற முறையில் சுத்திகரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, குடோனின் உரிமையாளரை நேரில் எச்சரித்த அதிகாரிகள், சட்டவிரோதமாக குடிநீர் குடோன் நடத்தக்கூடாது என அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்தக் குடோனுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதேபோல் டவுன் சாலியர் தெரு பகுதியிலும் அனுமதியின்றி இயங்கியதாக ஒரு குடிநீர் குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நெல்லை மாநகரப் பகுதிகளில் இதுபோன்று அனுமதியின்றி செயல்படும் மற்ற குடிநீர் குடோன்கள் குறித்தும் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.