தொடர் மழையால் தாமரைகுளம் நிரம்பியது
களக்காடு, அக். 29: களக்காடு வட்டாரத்தில் பெய்த தொடர் மழையால் நிரம்பிய தாமரைகுளம் கடல் போல் காட்சியளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அதுபோல களக்காடு பகுதியிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் ஆறு, கால்வாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. களக்காடு பகுதியின் முக்கிய நீராதாரமான தாமரை குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயிலும் நீர் திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தாமரைகுளம் நிரம்பி கடல்போல் காட்சியளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வாறு தாமரைகுளத்தில் நிரம்பிய தண்ணீர் மறுகால் பாய்ந்தது. குளத்திற்கு வரும் உபரிநீர் மறுகால் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து குளத்தின் மூலம் பாசனம் பெறும் விளைநிலங்களில் விவசாயிகள் வயல்களை சமன்படுத்தி டிராக்டர் உதவியுடன் தொழி அடித்தல், நாற்றங்காலில் நாற்று பாவுதல் உள்ளிட்ட விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கார் பருவத்தில் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கும் இந்த மழை பயனளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். தாமரை குளத்து பாசனத்தின் மூலம் சுமார் 500 ஏக்கர் விளை நிலங்களும், ஆயிரக் கணக்கான விவசாயிகளும் பயனடைந்து வருகின்றனர்.