எஸ்எம்ஏ நேஷனல் பள்ளி மாணவி 2ம் இடம்
நெல்லை, அக். 29: உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு இஸ்ரோவின் மகேந்திரகிரி மையம் நடத்திய மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவி 2ம் பரிசு வென்று சாதனை படைத்தார். உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு ‘விண்வெளி வாழ்வின் சவால்கள் - ஈர்ப்பின்றி ஒரு உலகம் என்ற தலைப்பில் 7, 8, 9ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாநில அளவில் நடந்த இந்த கட்டுரைப் போட்டிக்கு இறுதியாக 12 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் எஸ்எம்ஏ நேஷனல் பப்ளிக் பள்ளியின் 8ம் வகுப்பு மாணவி ஷைனி மாரநாதா மாநில அளவில் 2ம் பரிசை தட்டிச் சென்று சாதனை படைத்தார். இதற்கான பரிசளிப்பு விழா இஸ்ரோவின் மகேந்திரகிரி உந்தும வளாகத்தில் நடந்தது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு உந்தும வளாகத்தின் இயக்குநர் ஆசீர் பாக்கியராஜ், முன்னாள் இயக்குநர் மூக்கையா ஆகியோர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர். நிகழ்வில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.
விழாவில், ‘விகாஸ்’ காணொளி காட்சி மூலம் உந்தும வளாகத்தில் உள்ள விகாஸ் ராக்கெட் எஞ்சினின் நிலைகள், அதன் பணி மற்றும் தொழில்நுட்பம் குழுமி இருந்தோருக்கு விளக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை பள்ளித் தாளாளர் ராஜசேகரன், முதல்வர் டாக்டர் மகேஸ்வரி ராஜசேகரன், துணை முதல்வர் ராஜ்குமார், டாக்டர் அபிஷா ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.