நெல்லை அருகே விசைப்படகு மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் மீனவருக்கு பலத்த தீக்காயம்
கூடங்குளம், நவ.28: நெல்லைஅருகே விசைப்படகு மீது வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் மீனவர் பலத்த தீக்காயம் அடைந்தார். தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று மாலை கன்னியாகுமரியில் இருந்து தருவைக்குளம் துறைமுகம் நோக்கி நெல்லை மாவட்ட கடல் பகுதி வழியாக விசைப்படகுகளில் வந்து கொண்டிருந்தனர். இவ்வாறு கடல் வழியாக வரும் வழியில் சவேரியார்புரத்தைச் சேர்ந்த தாமஸ் சுரேந்திரன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு மீது கூத்தங்குழி பகுதியைச் சேர்ந்ததாகக் கூறப்படும் பைபர் படகு மீனவர்கள் நாட்டு வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் தருவைக்குளத்தைச் சேர்ந்த ஒரு விசைப்படகு தீப்பற்றி எரிந்ததோடு அதில் இருந்த வலைகளும் எரிந்து நாசமாகின. அத்துடன் விசைப்படகில் இருந்த தருவைக்குளத்தைச் சேர்ந்த பெரியராசு என்பவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.