கல்லிடைக்குறிச்சியில் தெருவில் விளையாடிய 3 சிறுமிகள் உள்பட 7 பேரை கடித்து குதறிய நாய்
அம்பை,நவ.27: கல்லிடைக்குறிச்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாய்கள் நடமாடி வருகிறது. இதனால் முதியவர்கள், குழந்தைகள், வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் ஒரே நாளில் 3 வயது சிறுவன் உள்பட 12 பேரை தெரு நாய்கள் கடித்து குதறியது. இதனால் தெரு நாய்களை உடனடியாக பிடிக்க பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நெல்லை கலெக்டர், நாய்களுக்கு உரிய பாதுகாப்புடன் கருத்தடை செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதைதொடர்ந்து கல்லிடைக்குறிச்சி பகுதியில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. இருப்பினும் நாய்கள் இனப்பெருக்கம் குறையவில்லை.
இதனால் கல்லிடைக்குறிச்சி பகுதியில் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றி திரிகிறது. இவை சாலையில் நடந்து செல்வோர், பைக்கில் செல்வோரை விரட்டுவது மட்டுமின்றி சில சமயங்களில் கடித்து வருகிறது. இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி குமாரகோவில் தெரு, அக்கர் சாலை ஆகிய பகுதியில் நேற்று முன்தினம் மாலை வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த 3 சிறுமிகள் உள்பட 7 பேரை நாய் கடித்து குதறியது. இதையடுத்து அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சமடைந்து வருகின்றனர். கல்லிடைக்குறிச்சி பகுதியில் கூட்டம், கூட்டமாக சுற்றி திரியும் தெருநாய்களை காப்பகங்களில் அடைத்து பராமரிக்கவும், குழந்தைகள், பொதுமக்கள் அச்சமின்றி தெருக்களில் நடமாடவும் வழிவகை செய்து தருமாறு பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.