பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வன பாதுகாவலர் கைது
அம்பை, அக்.26: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை பகுதிகளில் ஒப்பந்த கால அடிப்படையில் இயங்கி வந்த தனியார் தேயிலை தோட்ட நிறுவனம் கடந்த ஆண்டு மூடப்பட்டது. இதனால் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மறுவாழ்வுக்கான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் அவர்களை கீழே இறக்கவும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாஞ்சோலையில் வன பாதுகாவலராக பணியாற்றும் துரை மகன் அய்யாக்குட்டி(40) என்பவர் அங்குள்ள ஒரு வீட்டிற்குள் பெண்ணின் கணவர் இல்லாத நேரத்தில் மது போதையில் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கதவை பூட்டிக்கொண்டு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், மணிமுத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யாகுட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வனத்துறை ஊழியர் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது