சேரன்மகாதேவி அருகே பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி முகாம்
வீரவநல்லூர்,அக்.25: சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் சேரன்மகாதேவி அருகே திருவிருத்தான்புள்ளி கிராமத்தில் மல்பெரி சாகுபடி மற்றும் வெண்பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சி முகாம் நடந்தது. இதில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) மணி தலைமை வகித்து வேளாண்மை திட்டங்கள், நடப்பு பருவத்திற்கேற்ற நெல் ரகங்கள் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். வேளாண்மை துணை அலுவலர் வரதராஜன் வரவேற்றார். வட்டார பட்டு வளர்ச்சித்துறை இளநிலை ஆய்வாளர் பிரேமா துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பேசினார். தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் ஏசுராஜன் மல்பெரி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், மாவட்ட துணை தலைவர் பெருமாள் வெண்பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்தும் தொழில்நுட்ப பயிற்சி அளித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார். பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக்கேயன் செய்திருந்தார். முகாமில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.