களக்காட்டில் பழுதடைந்த சாலை தற்காலிகமாக சீரமைப்பு
களக்காடு,அக்.25: களக்காட்டில் பழுதடைந்த சாலை தற்காலிக சீரமைப்பு பணிகள் தொடங்கியதால், இன்று நடைபெறவிருந்த நாற்று நடும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சேரன்மகாதேவி-பணகுடி சாலையில் களக்காடு பழைய பஸ் நிறுத்தம் மற்றும் நாகன்குளம் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்கான தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படவில்லை. தற்போது பெய்து வரும் பருவ மழையினால் பள்ளங்களில் நீர் தேங்கி சாலை சகதிமயமாக காட்சி அளித்தது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டதால் வாகன ஒட்டிகள் பாதிப்பு அடைந்தனர். நோய்கள் பரவும் அபாயமும் நிலவியது.
எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி புரட்சி பாரதம் கட்சி சார்பில் இன்று (25ம் தேதி) பழுதடைந்த சாலையில் நாற்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் புரட்சி பாரத கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாவட்ட செயலாளர் நெல்சன், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. அத்துடன் பழுதடைந்த சாலையை தற்காலிகமாக சீரமைப்பு பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டது. இதனைதொடர்ந்து நாற்று நடும் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் நெல்சன் அறிவித்துள்ளார்.