பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
கூடங்குளம்,ஆக.21: கூத்தங்குழி மேலூர் விலக்கில் பயணிகள் நிழற்குடை இல்லாதால் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் பேருந்துக்காக பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி பயணிகள் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடங்குளம் அருகே கூத்தங்குழி மேலூர் கிராமத்தில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கூத்தங்குழி மேலூர் விலக்கில் இருந்து தான் நாகர்கோவில், திருச்செந்தூருக்கு பேருந்தில் பயணம் செய்ய முடியும். ஆனால் கூத்தங்குழி மேலூர் விலக்கில் இதுவரை பயணியர் நிழற்குடை கட்டித் தரப்படவில்லை. இதனால் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் பேருந்தில் பயணம் செய்ய ெபாதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலில் பேருந்து வரும் வரை அருகில் உள்ள விளம்பர பலகையின் நிழலில் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி கூத்தங்குழி மேலூர் விலக்கில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பயணிகள் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.