கடையநல்லூர் ஒன்றியம் சிங்கிலிபட்டி இந்திராநகரில் ரூ.10 லட்சத்தில் வீட்டு குடிநீர் இணைப்பு பணிக்கான பூமி பூஜை
கடையநல்லூர், டிச.13:கடையநல்லூர் ஒன்றியம் சிங்கிலிபட்டி இந்திரா நகர் பகுதியில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வீட்டு குடிநீர் இணைப்பு பணிக்கான பூமி பூஜையை யூனியன் சேர்மன் சுப்பம்மாள் பால்ராஜ் துவக்கி வைத்தார். கடையநல்லூர் ஒன்றியம் புன்னையாபுரம் ஊராட்சி சிங்கிலிபட்டி இந்திரா நகர் பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்பு இன்றி அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் விதமாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன், யூனியன் சேர்மனிடம் கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று 15வது நிதிக்குழு மானியம் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜையை நேற்று யூனியன் சேர்மன் சுப்பம்மாள் பால்ராஜ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் தலைமை வகித்தார். திமுக கிளை செயலாளர் முருகேசன், பாலு, சேட், முருகன், மணிகண்டன், ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.